சமீபத்திய புதசெவி

தமிழகத் தமிழர்கள், உலகத் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் : சகோதரத்துவம், மொழியுணர்வு, பம்மாத்து.

இலங்கைத் தமிழர்கள் பற்றி சில கேள்விகள் என்று கிரி என்ற பதிவர் கேட்டு, அதற்கு ஈழத்து அன்பர்கள் கும்மி குதறி எடுத்துவிட்டார்கள். அவர்களின் கோவத்தின் அடி நாதம் "உன் உடன்பிறப்பு பல வருடங்களாக துன்புறும் போது, இப்ப வந்து நீங்க எல்லாம் யாரு...? என்ற ஆதங்கம் என்றே நான் நினனக்கிறேன். அடிப்பட்டவனுக்குத் தான் வலி புரியும். உங்கள் வலியின் துன்பம் நீங்கள் எழுத்தில் வடித்தாலும், எங்களுக்கு அதன் வலியுணர்ச்சி குறைந்தே தெரியும்.

ஈழத்தைப் பற்றி அறியாமல் இருக்கின்றீர்களே என்று கலங்கும்/பொங்கும் அன்பர்களே, தமிழகத் தமிழர்களாகிய எங்களுக்கு எங்களைப் பற்றியே தெரியாது, இதில் உங்களைப் பற்றி தெரியவில்லை என்று நீங்க சொன்னால் நாங்கள் எங்கே போவது. ஆதி திராவிடர்களைப் பற்றி, அல்லது தமிழர்கள் பற்றி, அவர்கள் வரலாறு பற்றி, அவர்கள் அமுக்கப்பட்டதுப் பற்றி, தமிழர்களில் எத்தனைப் பேருக்கு தெரியும்.

தினசரிகளையும், குமுதம் ,ஆனந்த விகடனையும் படித்து வளர்ந்த மக்களுக்கு தமிழர்கள் பற்றிய அறிவு குறைவாகவே இருக்கும், அல்லது இல்லாமலே இருக்கும். இருக்கும் கொஞ்ச நஞ்ச அறிவையும், அவர்களிடையே புழங்கும் வெகு ஜன ஊடகங்கள் மழுங்கடிக்கும். ஏதோ தப்பிப் பிழைத்து பதிவு எழுதி, படித்து, உலகத்தை வேற ஒரு பார்வையில் பார்க்க நினைப்பவர்களுக்கு தமிழில் படிக்கக் கிடைப்பதில் சமயமும், ஈழமும் சார்ந்த பதிவுகள் தான் மிகுதி. அவைகளை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளி, மசாலாத்தனமானவைகளில் ஈடுப்படுத்திக் கொண்டு பொழுதுப் போக்கில் லயிப்பவர்கள் தான் அனேகர். இந்நிலையில் ஒரு சிலர், அட என்ன தான் சொல்லூறாங்க என்று பார்ப்போம் என்று , ஈழம் பற்றி படிக்க ஆரம்பித்தால், கேள்விகள் தானாக வந்து விழுகின்றன. தெளிவு செய்ய அகர முதலிகளா இருக்கின்றது...? எத்தனையோ வேண்டுகோள்களுடன் பதிவுகள் வந்திருக்கின்றது. அதைப் போல் இதுவும் வருகிறது. தெளிவு பெறும் நோக்கோடு.

இதற்கு முன்னர் கூட இதேப் போன்ற கேள்வியயைக் கேட்டு ஈழ் வரலாறு ஏன் ஆவணப்படுத்தக்கூடாது என்று பேசியதாக நினைவு (சுட்டி கிடைத்தால் கொடுங்கப்பா). நாங்கள் பள்ளியிலும் ஈழம் குறித்து கற்பதில்லை,வெகுசன ஊடகமும் அதற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. செய்தி பற்றாக்குறை இருந்தால் ஈழத்து (இலங்கை) செய்தி முன் பக்கம் வரும். இல்லாவிட்டால் பின் பக்கம் பொடி எழுத்துக்களில் மறையும். நிற்க.

திபத்தில் சீனாவின் அக்கிரமத்தை கண்டித்து, மலேசியாவில் ஒலிம்பிக் தீபத்தை எடுத்துச் செல்லுவதை தடுக்க சிலர் முயன்ற போது, மலேசிய சீனர்கள் அதை கண்டித்து, தடுத்து பாதுகாப்பு செய்கின்றனர். சீனாவை வாழ்நாளிலே பார்க்காமல், அந்தக் கொடுமைகளைக் கேட்டும், அது சீனர்களின் பெருமைக்கு பங்கமாக நினைத்து பாதுகாப்பு செய்கின்றனர். மலேசியாவில் சீனர்களுக்கு ஒன்றென்றால், சிங்கப்பூர் தும்முகிறது. அவருக்கு பட்டம் கொடுக்கவில்லை, இவருக்கு பட்டம் கொடுக்கலாம், எந்த தெருவில் இன்னும் கோவில் இல்லை, அந்தக் கோவிலில் என்ன பிரசாதம் என்றெல்லாம் யோசிக்க நேரம் இருக்கும் தமிழர்களுக்கு, தமிழர்களுக்கு ஒன்றென்றால், நேரமே வாய்ப்பதில்லை. அதற்கு காரணம் பூனைக் குணம். பூனை கண்ணை மூடிவிட்டால், உலகம் இருண்டுவிட்டதாக நினைக்குமாம். அதுப் போலவே, தேவையானவற்றை மட்டுமே நாங்கள் பார்பது பழக்கம். மற்ற பொழுதில் கண் மூடி கிடப்பதே என்பதே எங்கள் வழக்கம். நேரடியாக தனக்கு பங்கம் வராதவரை தான் கவலைக் கொள்ளத் தேவையில்லை என்று அசட்டையாக இருப்பது தமிழர்களின் கூறாக பின்னாளில் சொல்லப்பட்டால் அது மிகையில்லை.

தமிழர்களின் வரலாறு என்று சொல்வதென்றால் எந்த வருடத்திலிருந்து ஆரம்பிப்பது யாருக்குத் தெரியும்..? அதற்கு என்ன முயற்சிகள் தான் நடக்கின்றது..? அதுக்குறித்து யார் தான் கவலைக் கொள்கிறார்கள். கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்று பழம் பெருமை பேசிக்கொண்டே, 1000 வருடத்திற்கு முந்தைய மொழி என்று சொல்லி செம்மொழி பட்டம் வாங்கி பெருமிதம் கொள்வது தான் எங்கள் வழக்கம். ( தமிழிலிலிருந்து தோன்றியதாகச் சொல்லப்படும் மொழிக்கே, 1000 மேல் வயசு ). தமிழ் நாட்டிலே, தமிழர்களால் கட்டபப்ட்ட கோவிலில் தமிழில் பாட காவல்துறை, நீதிமன்றம், முதல்வர் ஆகியோர் தேவை. பிழைப்பிற்கு ஆங்கிலம் தேவை என்று சொல்லி, சொல்லி, தமிழில் பேசினால் தண்டம் கட்டனும் என்று துணிந்து சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது. ஏதேனும் செய்வோமா. நல்ல பள்ளி என்று அத்தாட்சி வேண்டுமானால் கொடுப்போம். அவ்வளவு மொழியுணர்ச்சி.

பக்கத்து தெருவில் குண்டு விழுந்தால், "அப்பாடி நான் தப்பிச்சிட்டேன்" என்று தான் வருகிறதே ஒழிய, "என்ன ஆனார்களோ" என்று தவிப்பு கொள்வர்கள் மிகச்சிலரே. இன்னும் சிலர் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது குறையட்டுமே என்றும் கூறுகிறார்கள். தமிழகத்தில் இருக்கும், சாதி பிரச்சனை விவகாரம் என்றாலே கண்ணை மூடிக் கொண்டு "இன்னுமா சாதி பிரச்சனை இருக்கு", "இப்ப எல்லாம் யாரு சாதி பார்க்கிறார்கள்","1947லே அதெல்லாம் தீர்க்கவில்லையா" என்று சட்டம் பேசுபவர்கள் தான் இங்கே அதிகம். உத்தபுரத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு வருவோம். அந்த சுவரை உடைக்க ,ஒரு அகில இந்திய கட்சித் தலைவர் போராட்டம் நடத்துவேன் என்றுச் சொல்லவேண்டும், ஒரு மாநில முதல்வர் உத்தரவிட வேண்டும். (சுவற்றிற்கு யார் காரணம், எத்தனை சுவர்கள் இப்படி இருக்கின்றன, இதுப் போன்று இனிமேல் வரமல் இருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் வசதியாக மறந்துவிடுவார்கள். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்) சுவற்றின் இந்தப் புறம் பாகிஸ்தானியர்களோ, சீனர்களோ இல்லை. ஆதிகுடிகளான தமிழர்கள் தான் இருப்புறமும் இருக்கிறார்கள். இந்த தமிழர்களுக்குள் நாம் சகோதரர்கள் என்ற எண்ணம் இன்னும் வரவில்லை. அவ்வளவு சகோதரத்துவம்.

எங்கள் அடிப்படை பிரச்சனைகளுக்கே நாங்கள் இறைவனை மட்டும் நம்புவர்கள். கடவுளே இன்று தண்ணி வரனும், கடவுளே இன்று இரவு மின் தடை வரக்கூடாது என்று அனுதினமும் தன்னை நம்புவதைக் கூட விட்டுவிட்டு, கடவுளிடம் சரணாகதி அடைவார்கள். ஆனால், தன்னுடைய வழிப்பாட்டு உரிமை கொள்ளைப் போவதைக் கூட சுரணையற்று, வேடிக்கைப் பார்ப்பார்கள். சீவி சிங்காரிச்சி, எங்கள் வீட்டிற்குள்ளேயே வந்து எங்கள் முகத்தில் உமிழும் வண்னம் எடுக்கப்படும் படங்களுக்கு ஆகா, ஓகோ, என்று பாராட்டி தள்ளும் நிலையில் தானே இருக்கின்றோம்.

தமிழர்களின் பாரம்பரியம் என்ன, எத்தனை காலம் இப்படி இருந்திருக்கிறோம், அதனால் என்ன இழந்தோம் என்று ஒரு சுயபிரஞ்ஞையும் இல்லாமல், அப்படியே யார் வேண்டுமானாலும் தரையில் ஏறி மிதியுங்கள் என்று சொல்லிவிடுவார்கள். அக்ஷ்யயை திருதியயை போல் இன்னும் கக்ஷ்ய திருதியயை, பக்ஷ்ய திருதியயை என்று பல் வேறு புரட்டுக்கள் சொன்னாலும், அப்படியே மதி மயங்கி சுற்றுவது தான் எங்கள் வாடிக்கை. 10000 வருடம் ஆட்சிப் புரிந்தானாம் ஒருத்தன் என்று ஒருவன் கதை சொன்னால், அட மண்டுகளா அத்தனை காலம் ஒருவன் வாழ முடியும்மா என்று கேள்வி கேட்க மாட்டோம். அவ்வளவு சுரணை.

பிரச்சனை என்று வந்துவிட்டால், தவறில்லை என்றாலும், குறுக்கு வழியில் பணம் கொடுத்து தப்பித்து வரவே பார்க்கின்றோம். உலகம் எங்கள் முன்னே வேகமாக முன்னேறுவதைப் பார்த்து, அதில் என் காலடி இல்லையே என்று அவசரமாக பணம் சம்பாதிப்பதில் ஓடும் கூட்டம் ஒரு புறம். அன்றாட வாழ்விற்கே துந்தனா போடும் கூட்டம் ஒரு புறம். இவர்களுக்கு தங்கள் குடும்பத்தை தவிர்த்து மற்றவர்கள் கண்ணுக்குத் தெரிவதே இல்லை. ஆயிரத்தில் பணம் வாங்கினோம், இன்று லட்சத்தில் பணம் வாங்கினால், அடங்கிவிடுவதில்லை. அலுவலக நேரத்தில் ஏதாவது பணம் செய்ய வாய்ப்பிருக்கிறதா, தொலைப் பேசியயை எடுத்துப் பேசினால், காசு வருமா என்று இன்னும் யோசித்துக் கொண்டு தான் இருக்கிறோம். பக்கத்து வீட்டுக்காரன் இழவு என்றால் விடுதியில் அறை எடுத்து தங்குபவர்கள் அதிகம். மனித நேயம் ரிலையன்ஸ் பிரஷில் கிடைத்தால் மட்டுமே, எங்களிடம் வர வாய்ப்பிருக்கிறது.


இந்நிலையில், நீங்கள் ஈழத்து சகோதரர்களை நாங்கள் மறந்துவிட்டதாக கூறுவது வேடிக்கையாக இல்லை...?

உங்கள் கேள்விகளில் நியாமில்லாமல் இல்லை. ஆனால், தற்பொழுது தமிழர்கள் இருக்கும் மனோநிலையில் நீங்கள் எதிர்ப்பார்ப்பது, புஷிடம் கருணையயைத் தேடுவதற்கு சமம்.

26 Comments:

ஜோ / Joe said...

வழிமொழிகிறேன்!

nedun said...

சரியாக சொன்னீர்கள் தோழர் டிபிசிடி
பெகளூர் கலவரத்தின் போது கருநாடகவிலிருந்து உயிர் தப்பி ஓடி வந்த தமிழர்களையே கர்நாடக அகதி என்று சொந்த நாட்டுக்குள்ளே அகதி பட்டம் கட்டியவன் தான் தமிழ்நாட்டுத் தமிழன். அவனுக்கு நாம் தமிழனா? இந்தியனா? அல்லது இந்துவா? என்பதுவே குழப்பம்.
இவர்களிடம் கருணையை எதிர்பார்பது

//உங்கள் கேள்விகளில் நியாமில்லாமல் இல்லை. ஆனால், தற்பொழுது தமிழர்கள் இருக்கும் மனோநிலையில் நீங்கள் எதிர்ப்பார்ப்பது, புஷிடம் கருணையயைத் தேடுவதற்கு சமம்.//

ஜெகதீசன் said...

முதலில் 200 க்கு வாழ்த்துக்கள்!!!!

கிரி said...

வணக்கம் TBCD நீங்க மறுபடியும் ஆரம்பித்து வைத்து இருக்கீங்க வாழ்த்துக்கள்.

நான் தெளிவு பெரும் நோக்கோடு கேட்டால், நீ எப்படி அந்த மாதிரி கேட்கலாம்? தமிழர்கள் பற்றி தெரியாமல் இருக்கிறாயே? இது கூட தெரியாமல் எப்படி இருக்கிறாய்? என்று கோபபடுகிறார்கள். இவர்களே இந்த மாதிரி கூறினால் என்னை போல் ஈழ தமிழர்களை பற்றி அதிகம் தெரியாதவர்கள் எப்படி கேட்க துணிவார்கள். ஆமாம்பா இவங்க கிட்ட கேட்டால் சண்டைக்கு தான் வருவார்கள் என்று தோணாதா?

ஆனால் பலர் இதற்க்கு தெளிவாக கூறி என் சந்தேகங்களை போக்கினார்கள். அவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். எனக்கு பலர் தனியாக மின்னஞ்சல் செய்து (பதிவில் சொல்ல பயப்பட்டு) என் மனதில் நீண்ட நாட்களாக இருந்த கேள்விகளுக்கு இன்று தான் பதில் தெரிந்தது என்று கூறிய போது, சரி நாமும் ஒரு உருப்படியான பதிவு போட்டு இருக்கோம் என்று சந்தோசப்பட்டேன். இதில் ஒருவர் என் இதயத்தில் இருந்து கூறுகிறேன் என்று கூறி என்னை ரொம்ப சந்தோஷப்படுத்தி விட்டார்.

நான் கூறுவது என்னவென்றால் ஈழ தமிழர்கள் பலர், தமிழகத்தில் அவர்களை பற்றி அனைவரும் அனைத்து விசயங்களையும் அறிந்து வைத்து இருப்பார்கள் என்று தவறாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காக அனைவரும் வருந்துகிறார்களே தவிர அனைத்தையும் தெரிந்து வைக்க வில்லை என்பதே என் தனிப்பட்ட கருத்து. நான் என் சந்தேகங்களை கேட்டு விட்டேன் பலர் கேட்கவில்லை அவ்வளவே வித்யாசம். அதற்கு பெயர் அனைத்தும் அறிந்து வைத்திருப்பது இல்லை.

கொழுவி said...

ஈழம் முன்பு இந்தியாவோடு இணைந்திருந்திருந்து பிரிந்ததென்றாலும் கூட- பிரிந்தபோது அங்கிருந்த தமிழர் ஈழத்தின் பூர்வீக குடிகள்தானே - அவர்கள் அங்கிருந்தே வாழ்பவர்கள்தானே -

இப்போதெல்லாம் - ஈழத்தமிழர் யார் அவர்கள் எங்கிருந்து போனார்கள் என்ற கேள்விகளை பார்க்கும் போது எரிச்சல்தான் வருகிறது.

தமிழகத் தமிழர்கள் யார் ? அவர்கள் எங்கிருந்து அங்கு சென்று குடியேறினார்கள் என்பது எத்தனை அபத்தம் ?

TBCD said...

இதில் தான் முரண்படுகிறேன்.

தெரிந்தும் வைத்திருக்கவில்லை. வருந்தவும் இல்லை. சினிமாக்காரனுக்கு அடிப்பட்டால் கூட கண்ணீர் வடிக்கும் சமூகம், தமிழர்கள் அடிப்படும் போது வருந்துவதில்லை என்பதே என் கருத்து.

வருகைக்கு நன்றி..கிரி

//
அவர்களுக்காக அனைவரும் வருந்துகிறார்களே தவிர அனைத்தையும் தெரிந்து வைக்க வில்லை என்பதே என் தனிப்பட்ட கருத்து.
//

TBCD said...

கொழுவி,

உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்தால் விடைக் கிடைக்கலாம்.

தமிழர்கள் தமிழகத்திலே தான் தோன்றினார்கள் என்பதற்கான ஆதாரம் இல்லை.

ஆனால், வெகு காலத்திற்கு முன்னரே வந்திருக்கலாம் என்பதாக ஆதரங்கள் சொல்கின்றது.

பிரோங்கோ எதியோப்பியர்கள் என்று நக்கலாக சிலர் சொன்னாலும், மனித இனத்திற்கு பிறப்பிடம் ஆப்ரிக்கா என்ற ஒப்புக் கொண்டால், நாம் வேறு ஒரு இடத்தில் இருந்து வந்தவர்கள் தாம். (இல்லை எல்லா கண்டத்திலும் டார்வினின் பரினாம வளர்ச்சி ஒரேப் போல் ஏற்பட்டு மனிதர்கள் தோன்றினார்கள் என்று புதிதாக யோசிக்கனும்...)

ஈழம் தனி நாடாவதற்கு தமிழர்கள் அங்கே பூர்வ குடிகள் என்ற காரணம் காட்ட வேண்டிய அவசியமே இல்லை. தமிழ்ச் சமுதாயம், இலங்கை அரசமைப்பில் நம்பிக்கை இல்லாமல் பிரிய நினைக்கின்றது என்ற ஒரு கருத்தே போதும்.

இசுலாமியர்கள் இந்தியாவிலிருந்து பிரியவில்லையா...? எண்ணிக்கையின் அடிப்படையிலும், சிந்தாந்த அடிப்படையிலும் தானே அந்த பிரிவு ஏற்பட்டது.

எனவே உணர்ச்சிப்பூர்வமாக இதை பார்க்காமல், தமிழர்களின் உண்மை வரலாறு ( தமிழக+ஈழ) பார்க்கப்பட வேண்டும் என்பது தான் என் எண்ணம்.

///
கொழுவி said...
ஈழம் முன்பு இந்தியாவோடு இணைந்திருந்திருந்து பிரிந்ததென்றாலும் கூட- பிரிந்தபோது அங்கிருந்த தமிழர் ஈழத்தின் பூர்வீக குடிகள்தானே - அவர்கள் அங்கிருந்தே வாழ்பவர்கள்தானே -

இப்போதெல்லாம் - ஈழத்தமிழர் யார் அவர்கள் எங்கிருந்து போனார்கள் என்ற கேள்விகளை பார்க்கும் போது எரிச்சல்தான் வருகிறது.

தமிழகத் தமிழர்கள் யார் ? அவர்கள் எங்கிருந்து அங்கு சென்று குடியேறினார்கள் என்பது எத்தனை அபத்தம் ?
///

கிரி said...

// சினிமாக்காரனுக்கு அடிப்பட்டால் கூட கண்ணீர் வடிக்கும் சமூகம், தமிழர்கள் அடிப்படும் போது வருந்துவதில்லை என்பதே என் கருத்து//

நீங்கள் சொல்வது சரி தான், ஆனால் அனைவரும் என்பது மிகைப்படுத்தப்பட்ட சொல்லாக இருக்கலாம் ஆனால் ஈழ தமிழர்களுக்காக வருத்தப்படுகிறவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். எண்ணிக்கை ரொம்ப குறைவு என்பது வருத்தமான ஒன்று தான். இந்த நிலை மாறுவது கடினம் என்றே கருதுகிறேன். நம்மவர்கள் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றால் சரி என்ற மன நிலையிலேயே இருக்கிறார்கள் அடுத்தவரின் துன்பம் பற்றி கவலை படாமல்.

நையாண்டி நைனா said...

அட.....ச்....சே... இந்த TBCD எப்பொவுமே இப்படி தான் ... நல்லா.. தூங்கும் போது தான் எழுப்புவார்ர்...

கோவை சிபி said...

ஈழம் பற்றிய 80 களில் இருந்த அரைகுறை அறிவுகூட இப்போது பெரும்பான்மை மக்களுக்கு இல்லை என்பது உண்மை.அது ஏன் என்ற கேள்விக்கு விடைதரும் விதமாக இருக்கிறது உங்கள் பதிவு.

TBCD said...

மிகுதியனோர் என்பதைத் தான் நானும் குறிப்பிட விழைகிறேன்.

ஈழத்தமிழர்களுக்காக பரிந்துப் பேசிய விஜயகாந்த், இலங்கைக்கு பணம் கொடுப்பதைப் பற்றி மழுப்பியதை கவனியுங்கள்.

அரசியல்வாதிகளே, சுயலாபம், இல்லாமல் ஒருவரும் ஈழம் பற்றி பேசுவதில்லை என்பது என் கருத்து. ஆனால் அதற்கு சான்றுகள் இல்லை. (ஒரு மாதிரியாக நிகழ்வுகளின் அடிப்படையில்)அதனால் பதிவில் குறிப்பிடவில்லை.

கருத்திற்கும் உரையாடல் வாய்ப்பிற்கும் நன்றி.

//
கிரி said...
நீங்கள் சொல்வது சரி தான், ஆனால் அனைவரும் என்பது மிகைப்படுத்தப்பட்ட சொல்லாக இருக்கலாம் ஆனால் ஈழ தமிழர்களுக்காக வருத்தப்படுகிறவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். எண்ணிக்கை ரொம்ப குறைவு என்பது வருத்தமான ஒன்று தான். இந்த நிலை மாறுவது கடினம் என்றே கருதுகிறேன். நம்மவர்கள் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றால் சரி என்ற மன நிலையிலேயே இருக்கிறார்கள் அடுத்தவரின் துன்பம் பற்றி கவலை படாமல்.
//

கோவி.கண்ணன் said...

aNNE,

வழிமொழிகிறேன்!

Super !!!

பொதிகைச் செல்வன் said...

வணக்கம்,
புதிய கோணத்தில் ஈழத் தமிழர் பற்றி தொடர் பதிவு இட்டதற்கு நன்றி. நண்பர் கிரி அவர்கள் பதிவில் அனைத்து ஈழத் தமிழ் பதிவர்களும் மிகப் பொறுமையாக அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலை பதிவு செய்திருந்தனர். என் போன்ற தமிழகத் தமிழர்கள் மட்டுமே குமுறித் தள்ளியிருந்தோம். இதனைப் பார்த்து எனக்கே, நாம கொஞ்சம் ஓவராக போய் விட்டோமோ? என்றும் அல்லது ஈழத் தமிழர் தமிழகத் தமிழரிடம் இதையெல்லாம் எதிர் பார்க்கவில்லையோ? என்றும் அல்லது ஆயுதம் வழங்கும் இவர்களிடம் அனுதாபத்தை எப்படி எதிர்பார்ப்பது என்று நினைக்கிறார்களோ? என்றும் தோன்றுகிறது. நாம் சூழ்நிலைக் கைதிகளாய் இங்கே இருப்பது அவர்களுக்குத் தெரியும் போல தெரிகிறது. அதனைக் காரணம் காட்டி நமது பொறுப்பை நாம் தட்டி கழிக்க முடியாது. நாம் தமிழகத் தமிழர் என்றும் ஈழத் தமிழருக்கு ஆதரவாகவே இருப்போம். தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் பிரேமதாசாவின் கொடும்பாவியை கட்டை வண்டியில் ஏற்றி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி தெருத் தெருவாக இழுத்து வந்து, கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் சேர்ந்து அதனை தீயிட்டு கொழுத்தியது - எனது பள்ளி நாட்களில் நடந்தது- போன்ற எழுச்சி மீண்டும வரும். அப்போது அவர்கள் மீதுள்ள தடைகள் மற்றும் விலங்குகள் யாவும் உடையும்.

குசும்பன் said...

சுருக்கமா அப்படியே உண்மை தமிழன் போலவும், சொல்ல வந்த கருத்தை பெயரிலி போலவும் தெளிவாக சொல்லி இருக்கீங்க TBCD வாழ்த்துக்கள்.

TBCD said...

நாம் சூழ்நிலைக் கைதிகளாக இல்லை.

நாம் மழுங்கடிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதே சரி.

///
பொதிகைச் செல்வன் said...
வணக்கம்,
நாம் சூழ்நிலைக் கைதிகளாய் இங்கே இருப்பது அவர்களுக்குத் தெரியும் போல தெரிகிறது.
///

இந்த உணர்ச்சி அனைவருக்கும் வரவேண்டும்.

///
என்றும் ஈழத் தமிழருக்கு ஆதரவாகவே இருப்போம். ///

ராஜிவின் மரணத்திற்கு அதீதமான குற்றவுணர்ச்சியினால், தமிழர்கள் சற்று மவுணமானார்கள். ஆனால், ஒரு சமூகமே அதற்காக பலியாவது அநியாயம். இதனை உரத்து ஒலிக்க, தமிழகத்தில் யார் இருக்கின்றார்கள் என்பதே கேள்வி. கிராமங்களில் எப்போதும் ஈழ ஆதரவு குரல் உண்டு என்றாலும், நகர மாந்தர்கள் வழக்கம் போல் இதில் மெளனிகள் தான்.

///
தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் பிரேமதாசாவின் கொடும்பாவியை கட்டை வண்டியில் ஏற்றி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி தெருத் தெருவாக இழுத்து வந்து
, கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் சேர்ந்து அதனை தீயிட்டு கொழுத்தியது - எனது பள்ளி நாட்களில் நடந்தது- போன்ற எழுச்சி மீண்டும வரும். அப்போது அவர்கள் மீதுள்ள தடைகள் மற்றும் விலங்குகள் யாவும் உடையும்.
///

jaisankar jaganathan said...

உங்கள் கருத்து உண்மையானது

rapp said...

என்னண்ணே, இப்போல்லாம் தினமும் பதிவு போட மாட்டேங்ககிறீங்க.

TBCD said...

வழிமொழிந்ததற்கு நன்றி ஜோ
//
ஜோ / Joe said...
வழிமொழிகிறேன்!
//

TBCD said...

கூடப்பிறந்த உடன்பிறப்புக்களையே பணம் என்று வந்துவிட்டால் பிரிந்துவிடுகின்ற அளவிற்கு தான் நாம் உள்ளோம்..

உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்..நெடுன்..
///
nedun said...
சரியாக சொன்னீர்கள் தோழர் டிபிசிடி
பெகளூர் கலவரத்தின் போது கருநாடகவிலிருந்து உயிர் தப்பி ஓடி வந்த தமிழர்களையே கர்நாடக அகதி என்று சொந்த நாட்டுக்குள்ளே அகதி பட்டம் கட்டியவன் தான் தமிழ்நாட்டுத் தமிழன். அவனுக்கு நாம் தமிழனா? இந்தியனா? அல்லது இந்துவா? என்பதுவே குழப்பம்.
இவர்களிடம் கருணையை எதிர்பார்பது
///

TBCD said...

நன்றி ஜெகதீசன்..

201 பதிவு ஆனபிறகே நானும் அதைக் கண்டேன்.

முதலில் எண்ணிக்கையில் ஒரு ஈர்ப்பு இருந்தது..இப்போ கொஞ்சம் அது குறைந்திருக்கிறது...


//
ஜெகதீசன் said...
முதலில் 200 க்கு வாழ்த்துக்கள்!!!!
//

TBCD said...

தூங்க வேற இடமே கிடைக்கலையா...என் பதிவு தானே கிடைச்சது...கொடுமை...


///
நையாண்டி நைனா said...
அட.....ச்....சே... இந்த TBCD எப்பொவுமே இப்படி தான் ... நல்லா.. தூங்கும் போது தான் எழுப்புவார்ர்...
///

TBCD said...

கோவை சிபி,
நீங்கள் சொல்வது
உண்மை என்றே நானும் நினைக்கிறேன்.

நன்றி.

///
கோவை சிபி said...
ஈழம் பற்றிய 80 களில் இருந்த அரைகுறை அறிவுகூட இப்போது பெரும்பான்மை மக்களுக்கு இல்லை என்பது உண்மை.அது ஏன் என்ற கேள்விக்கு விடைதரும் விதமாக இருக்கிறது உங்கள் பதிவு.
///

TBCD said...

நன்றி அண்ணாச்சி...

//
கோவி.கண்ணன் said...
aNNE,

வழிமொழிகிறேன்!

Super !!!
//

TBCD said...

நன்றி குசும்பன்,

எல்லாரும் குசும்பன் போல நறுக்கென்று எழுத முடியும்மா...

ஐந்து விரல்களும் ஒன்று போலவா இருக்கு...

(எல்லார்க்கும் ஐந்து விரல் தான் இருக்கு என்று எகனை முகனை வேண்டாம்..:P )

///
குசும்பன் said...
சுருக்கமா அப்படியே உண்மை தமிழன் போலவும், சொல்ல வந்த கருத்தை பெயரிலி போலவும் தெளிவாக சொல்லி இருக்கீங்க TBCD வாழ்த்துக்கள்.
///

HK Arun said...

ஈழத்தமிழர் வாழ்வும் போராட்ட வரலாறும் இந்த தளத்தில் இருக்கும் பல ஆக்கங்களின் ஊடாக அறிந்துக்கொள்ளலாம்.

http://www.tamilnation.org/diaspora/articles/espo.htm

இந்த சுட்டியூடாக ஆங்கிலத்தில் வாசித்தறியலாம்.
http://www.tamilnation.org/tamileelam.htm
அப்படியே தமிழீழத் தேசிய கீதத்தையும் கேட்கலாம்


நன்றி

TBCD said...

சுட்டிக்கு நன்றி அருண்.

கண்டிப்பாக படிக்கிறேன்.

கருத்துக்கள் இருந்தால் பகிர்ந்துக் கொள்கிறேன்.

///
HK Arun said...
ஈழத்தமிழர் வாழ்வும் போராட்ட வரலாறும் இந்த தளத்தில் இருக்கும் பல ஆக்கங்களின் ஊடாக அறிந்துக்கொள்ளலாம்.

http://www.tamilnation.org/diaspora/articles/espo.htm

இந்த சுட்டியூடாக ஆங்கிலத்தில் வாசித்தறியலாம்.
http://www.tamilnation.org/tamileelam.htm
அப்படியே தமிழீழத் தேசிய கீதத்தையும் கேட்கலாம்


நன்றி
///

சமீபத்தில் குழப்பத்தில் கலந்தவர்கள்