சமீபத்திய புதசெவி

நானும் வள்ளலார் தான்..........

வள்ளலார் ஒளி வடிவத்தை வணங்கினாராம். கண்ணாடியில் அவர் முகம் பார்த்தாலும், முகம் தெரியாதாம், ஒளி தான் தெரியுமாம். அவர் சமாதி அடைந்தப் போதுக் கூட, ஒளியில் கலந்தாராம். அதெல்லாம் சரி, என்னை ஏன் வள்ளலார் என்றுச் சொன்னேன் என்று வினவுகிறீர்களா...??? அவசரம் வேண்டாம்..பொறுமையாக படியுங்க..புரியும்.

இப்போதைய புதுக்கொள்கையாக படம் பார்க்காமல், விமர்சனங்களையோ, அல்லது, அதுக்குறித்தான கருத்துக்களையோ படிப்பதில்லை என்று கடைப்பிடித்ததால், தசாவதாரம் பற்றிய பதிவுகளை நான் படிக்க வில்லை. ஆனால், இந்தப் பதிவிற்கும் ஏற்கனவே வந்த சில பதிவுகளுக்கும் ஒற்றுமைகள் இருந்தால், அது எதேச்சையானதே.

படத்தில் முன்னரே குறிப்பிட்டதுப் போல், 12ஆம் நூற்றாண்டைக் காட்டும் போது, அனைவருமே, கிட்டத்தட்ட அனைவருமே,முப்புரிநூலுடன் திரிவது காட்சிப்பிழை. ரங்கராஜ பெருமாளை கடலில் வீசும் முன் வரும் காட்சியில் சில குடியானவர்களைக் காட்டுகிறார்கள், மற்றபடி,எல்லாம் அரை மண்டைகளும், கொட்டை தாங்கிகளும் மட்டுமே, சோழர் காலத்தில் வாழ்ந்ததாக தெரிகிறது. ரங்கராஜ நம்பியாக, கமல் நச்சென்றூ பொருந்துகிறார். ஓம் என்றூ முழங்கும் போது, நமக்கும் அதிருகிறது..( அட இதுவும் தமிழ் இல்லையா என்று..ஓம் என்ற பிரனவ மந்திரத்தை முருகன் தந்தைக்கு அருளியதாக சொல்வது, முருகனை ஆரியக்குடும்பத்தில் சேர்க்க மட்டுமே என்று எங்கோ படித்ததாக நினைவு..)

படத்தில் கிராபிக்ஸ் செய்தால் அது கிராபிக்ஸ் என்று தெரியாத வண்ணம் செய்தால் நன்றாக இருக்கும். ஆனால், சமீப கால படங்களில் அது கிராபிக்ஸ் என்றூ தெரியும் வண்ணமே, அதன் தரம் இருக்கின்றது. உதாரணம். தில்லை சிதம்பரம் கோவிலை, கானொளிக்கருவி கிழிருந்து மேல் போய், பின் மேலிருந்து கீழ் போகின்றது. கற்கோபுரம் கிராபிக்ஸ் என்று சிறுப்பிள்ளைக் கூட சொல்லும் வண்ணம் இருக்கின்றது. நெப்போலியன்,சோழன் பாத்திரத்தில் நிறைவாக செய்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்திலேயே, கமல் பகுத்தறியும் என்று பேச்சை ஆரம்பிக்கின்றார். ஆனால், படம் பார்த்து முடிக்கும் சாமனியனுக்கு, பகுத்தறிவை போதிக்கின்ற படம் என்று கடைசி வரை தெரியாதவாறும் பார்த்துக்கொள்கிறார். இன்னும் சொல்லப் போனால், சில கிறுக்குகள், கடவுளின் இருப்பை உறுதிப்படுத்தும் படம் என்றே சொல்லிக் கொள்ளக் கூடும்.

உயிர்க்கொல்லும் கிருமிகளைக் கண்டுப்பிடிக்கும் விஞ்ஞானியாக வரும் கமல் வழக்கம் போல், நாம் பல படத்தில் பார்த்த, ரசித்த, வசனத்தில் நகைச்சுவை செய்யும் கமல். சொல்லவே வேண்டாம், பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்றவாறு வளைந்து நெளிந்து, குழம்பி தவிக்கிறார். ரங்கராஜரை கதையில் நுழைத்ததாலோ என்னவோ, கதாப்பாத்திரங்களில் பேர்களில் எல்லாம், ஒரே வைணவ வாடை. விஞ்ஞானி கமல் - கோவிந்த், ரா அமைப்பு அதிகாரி- பல்ராம் நாயுடு, அசின் - ஆண்டாள், பாட்டி (கமல்)- கிருஷ்னவேணி, பாடகர்-அவதார் சிங்..(அவதாராம், தசாவதாராம், வைணவம்...)

கமலுக்கு இந்த ஐயங்கார் கதாப்பாத்திரங்களை செய்வதில் அலாதி ஆசை போல் இருக்கின்றது. மைக்கேல் மதனக்காமராஜன், மீண்டும் கோகிலா, ஹே ராம்...என்று பட்டியல் தொடரும். கமல் விரும்பி செய்கின்றாரா என்ற குழப்பம் எனக்கு இருக்கின்றது. எல்லாரையும் அரவனைக்க வேண்டும் என்று சொல்லும் கமல் ஒரு சாதி வட்டத்துக்குள்ளே சிக்கி சீரழிவது எனக்கு வருத்தமே.

அடுத்தடுத்து தொடர்புடைய நிகழ்ச்சிகளை அடுக்கி வைத்து, சுவாரசியம் குறையாமல், நம்மை இழுத்துச் செல்வதில் திரைக்கதை ஆசிரியராக கமல் அசத்துகிறார். இதுப்போன்ற, 5 நாளுக்குள் நடக்கும் கதைகள் தமிழ் திரையில் அரிதாகவே காணப்படும். சும்மா, எடுத்தால், 25-50 வருடக் கதையயை அநாயசமாக எடுத்து, குப்பைப் படமாக வழங்கும் கே.எஸ்.ரவியயை இழுத்து வந்த கமல் பாராட்டுக்குரியவர்.

ஒவ்வொரு வேடத்திலும் நாம் பார்த்து முகம் சுளித்த பழைய சதை தொங்கும் வேடமேற்றி நடித்திருகிறார். அதுத் தேவையா என்றூ ஒரு நிமிடம் யோசித்தேன்.கதையில் கமலே எல்லா வேடமேற்றூ நடிப்பதால், கமல் எல்லாக் காட்சியிலும் வர முடிகின்றது. அதைத் தானே நமது நாயகர்கள் அனைவருமே விரும்புகிறார்கள். அசினுக்குப் பதிலாகவும் கமலே கதாநாயகி வேடமேற்றுயிருக்கலாம். ( எப்படியும் முத்தக் காட்சி இல்லை இதில்..அப்பறம் என்ன....:P )

அகதாநாயகன் வேடத்தில் நடிக்க கமலுக்கு ஆசைப் போலும், இதில் அதை நிறைவு செய்துக் கொண்டியிருக்கிறார். நிறைவான நடிப்பு, என்னக் கொஞ்சம் டெர்மினேட்டர் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால், கிட்டத்தட்ட வெள்ளைக்காரன் என்று நம்பும்படியான நடிப்பு. அசாகயமாக அடிக்கிறார், அடிவாங்குகிறார், குதிக்கிறார், தவ்வுகிறார் இன்னும் என்ன என்னமோ பண்ணுகிறார். என்னைக் கவரும் அவதாரங்களில் அவரும் ஒருவர்.

விண்செண்ட் பூவராகன் என்று என்று எந்த தலித் போராளி பெயர் வைத்திருக்கிறார் என்றுத் தெரியவில்லை. அதேப் போல், தொந்தியும் தொப்பையுமாக, ஒரு போராளியயை அடையாளப்படுத்தியதும் ஏன் என்றும் புரியவில்லை. திருநெல்வேலி வட்டார மொழி பேசியபடி, தில்லை/புதுவைக்கருகே ஒரு போராளியா. ஏதோ ஒரு வட்டார மொழி பேச வேண்டும் என்பதற்காக இப்படியா. எல்லா அவதாரங்களும் உயிருடன் மிஞ்ச, ஒரு தலித் அவதாரம் தான் சாகடிக்கப்பட வேண்டுமா என்றக் கேள்வி எழும்புகிறது. எத்தனைக் காலம் தான் இப்படி தியாகிவே இருக்க வேண்டும்.

ஆத்திகவியாதிகள்(வாதிகள்) வழக்கமாக பாடும் பாடல், எல்லாம் அவன் செயல். அவனின்றி ஒரு அனுவும் அசையாது என்று. அது சாத்தியமே இல்லாத ஒன்று என்று பகவானே (அப்படி ஒருவர் இருந்தால் ) வந்துச் சொன்னாலும், அவர்கள் நம்பப் போவதில்லை. ஆனால், வாழ்க்கையில் 90% செயல்பாடுகள் நம் கையில் இல்லை. நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் விந்தையாக, அடுக்கடுக்காக நிகழ்ந்து, ஒரு நல்ல நிகழ்வோ, கெட்ட நிகழ்வோ நடக்கின்றது. நல்ல நிகழ்வு என்றால், இறைவனைக் கொண்டாடுவதும், கெட்ட நிகழ்வு என்றால், விதியயைப் பழிப்பதும் தான் இவர்களின் வழக்கம். இந்தப் படத்தில், இப்படி அடுக்கடுக்காக நடக்கின்ற நிகழ்வுகளில், இந்த 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கதை மட்டும், ஒட்டாமல், தள்ளி நிற்கின்றது. அதைப் பிய்த்துப் போட்டால், படத்தின் ஓட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.

நானும் ஏதேதோ யோசித்துப் பார்த்தேன், அந்தக் கட்டம் படத்தில் வருவதற்கு கமலின் சரித்திர பட ஆசை தவிர வேற எதுவுமே இருக்க முடியாது என்று சமாதானம் செய்துக் கொண்டேன். அது சரி கமலின் படங்கள் எல்லாமே அவரின் ஆசையின் விளைவு தானே.. :P. அந்த ரங்க ராஜன் நம்பி, அரசனையே, எதிர்க்கும் நெஞ்சுரம் உள்ளவராகவும் காட்ட இப்படி காட்டுத்தனமான உடம்பைக் காட்ட வேண்டுமா. கோவிலில் மணியாட்டுபவர்களின் உருவமைப்பு எப்படி இருக்குமென்று கமல் பார்த்ததில்லையா.

பல்ராம் நாயுடு கதாப்பாத்திரத்தில் கமல் மிகையில்லாமல், நடித்து வயிற்றை புண்ணாக்குகிறார். ஆனால், ரா உளவுப் பிரிவு அதிகாரி, இப்படி, வானூர்தியில் தொங்கியபடியே வருவார் என்பது ஜீரணிக்க முடியாத வண்ணம் இருக்கின்றது. ஜப்பானிய யூகாவின் அண்ணனாக வரும் கமலுக்கு உண்மை எப்படி விளங்குகிறது என்பது விளக்கப்படவில்லை.ஒரு வேளை ரங்கராஜர் ஓவர் டைம் பார்த்து கணவில் சொன்னார் போல் தெரிகின்றது.

கதாநாயகன் வயது சுமார், 30க்குள் இருக்கும் என்று வைத்துக்கொள்வோம்..திருமணம் ஆகதவர் என்பது அதை இன்னும் உறுதிப்படுத்துகிறது.அப்ப அவருடைய அப்பாவின் தலைமுறை 1950கள் என்றுக் கொண்டாலும், அந்த தலைமுறையில் சாதிப் பெயருடன் பெயர் சொல்லுவதை நிறுத்தியாயிற்று. (மறுப்பவர்கள் விளக்கம் சொல்லனும்ன்னேன்..) பின்னே, என்ன விளக்கெண்ணெய் தனத்திற்கு தன்னுடைய தகப்பனாரின் பெயர், ராமசாமி நாயக்கர் என்று வைக்கனும், அதில் அவரை அசின் வாயால் வசைப்பாட வைக்கனும். கமல் இரண்டுங்க்கெட்டாந்தனமாக படம் எடுப்பதை நிறுத்தினால் தேவலம். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைப்பதால் யாருக்குத் தான் என்ன லாபம்.

படத்தின் முடிவிற்கு முன்னால் கமல் சொல்லும் வசனம் ."கடவுள் இல்லையென்று நான் எப்போ சொன்னேன்..அப்படி ஒருவர் இருந்தால் நல்லா இருக்கும் என்று தானே சொன்னேன்"..நல்லா எழுதுறாரய்யா....உலக நாயகன்...

படத்தின் இறுதியில் அந்த கமர்ஷியல் பாட்டு தேவையா...உலக நாயகனே என்று...மீண்டும் ஆற்றில்......(நிரப்பிக் கொல்லவும்..)

ஆக மொத்தம், தசாவதாரம் சுவாரசியமான படம்..ஆனால், உலகத்தரமல்ல.

நிற்க....

தமிழிலும் தெலுங்கிலும் "கல்லை மட்டும் கண்டால்" பாடலில் "பல்லாயிரத்தாண்டு" ஒலிக்கும் பகுதி தமிழிலேயும், ஹிந்தியில் மட்டும் "தேவ மொழி" ஒலிப்பது ஏனோ. கமலுக்கே வெளிச்சம்

பி.கு:-

எல்லாரும் தசாவதாரம் பற்றி எழுதி ஒளியில் ஐக்கியமாகச் சொன்னார்கள், இப்ப இந்தப் பதிவை எழுதுவதன் மூலம், நான் ஒளியில் ஐக்கியமாகிவிட்டேனே..அப்ப நானும் வள்ளலார் போல் தானே..

20 Comments:

கோவி.கண்ணன் said...

//கோவிலில் மணியாட்டுபவர்களின் உருவமைப்பு எப்படி இருக்குமென்று கமல் பார்த்ததில்லையா. //

டிபிசிடி ஐயர்,

இது முரண் நகை... நடித்திருப்பது ஒரிஜினல் தானே அம்பி ? அப்போது ஏன் அவ்வாறு இருக்க முடியாது என்று நினைக்கிறீர்கள் ?

கோவி.கண்ணன் said...

//ஹிந்தியில் மட்டும் "தேவ மொழி" ஒலிப்பது ஏனோ. கமலுக்கே வெளிச்சம்//

இப்படி ஒண்ணு வேற இருக்கா ? சிதம்பரத்தில் அம்பி தேவ மொழியில் தான் பாடினாரோ என்னவோ

TBCD said...

கோவியாரே,

அம்பிகளுக்கு கட்டுடல் வராது என்றுச் சொல்லவில்லை..கோவிலில் மணியாட்டுபவர்கள் இப்படி இருப்பதில்லை என்று தான் சொன்னேன்.

சரியாக பார்க்கவும்.

///
கோவி.கண்ணன் said...
//கோவிலில் மணியாட்டுபவர்களின் உருவமைப்பு எப்படி இருக்குமென்று கமல் பார்த்ததில்லையா. //

டிபிசிடி ஐயர்,

இது முரண் நகை... நடித்திருப்பது ஒரிஜினல் தானே அம்பி ? அப்போது ஏன் அவ்வாறு இருக்க முடியாது என்று நினைக்கிறீர்கள் ?
///

ஜெகதீசன் said...

படம் இன்னும் பாக்கலை.. அதனால நோ கமெண்ட்ஸ்.(பார்த்தாப்புல என்ன பின்னூட்டீர்ரப் போற ன்னு கேட்டுறாதீங்க...)
//
அந்த தலைமுறையில் சாதிப் பெயருடன் பெயர் சொல்லுவதை நிறுத்தியாயிற்று.
//
அப்படியா?
எனக்குத் தெரிந்து எங்க ஊரில் ரெம்பப் பேரின் அப்பாக்கள் சாதிப் பெயருடன் அறியப் படுகிறார்கள் இன்னும்...

ஆனால் இங்கு பெரியாரை வசை பாடுவதற்காக இப்படி எடுத்திருப்பது கண்டனத்திற்குறியதே.... :(

ஜெகதீசன் said...

வடிவேல் *** மகன்,
செல்லவேல் ***** பேரன்,
குருசாமி ***** மகன்......

இதெல்லாம் எங்க ஊரில் நண்பர்கள் சிலரைப் பெரியோர்கள் அறிமுகப்படுத்தும் விதம்....

salem thiagu said...

படம் பாத்து முடிச்ச கைய்யோட கருத்து சொல்லிட்டீங்க.....

எனக்கு இன்னும் வலயதள இணைப்பு இன்னும் கிடைக்கல.........(தேடிட்டே இருக்கேன்)

எதாச்சும் இணைப்பு இருந்தா அனுப்பிவைங்க.........(முறைப்படி தான் பாக்கணும்..

என்ன செய்ய.. இங்க வேற வழி இல்ல.)

salem thiagu said...

படம் பாத்து முடிச்ச கைய்யோட கருத்து சொல்லிட்டீங்க.....

எனக்கு இன்னும் வலயதள இணைப்பு இன்னும் கிடைக்கல.........(தேடிட்டே இருக்கேன்)

எதாச்சும் இணைப்பு இருந்தா அனுப்பிவைங்க.........(முறைப்படி தான் பாக்கணும்..

என்ன செய்ய.. இங்க வேற வழி இல்ல.)

வினையூக்கி said...

[[ தமிழிலும் தெலுங்கிலும் "கல்லை மட்டும் கண்டால்" பாடலில் "பல்லாயிரத்தாண்டு" ஒலிக்கும் பகுதி தமிழிலேயும், ஹிந்தியில் மட்டும் "தேவ மொழி" ஒலிப்பது ஏனோ. கமலுக்கே வெளிச்சம் ]]

எப்படி சார் , இதை எல்லாம் சரியாகக் கவனித்து கவனத்திற்கு கொண்டு வருகிறீர்கள். தங்களின் உன்னிப்பான கவனத்திற்கு பாராட்டுக்கள்.
:))

Udhayakumar said...

//அனைவருமே, கிட்டத்தட்ட அனைவருமே,முப்புரிநூலுடன் திரிவது காட்சிப்பிழை.//

புதசெவி, அதுதான் உண்மையும் கூட. குடியானவர்கள் அரசனுடன் அனுதினமும் கூடிக் குலவியது கிடையாது. சைவ, வைணவச் சண்டை முழுக்க முழுக்க முப்புரி நூல்காரகள் செய்ததுதான். குடியானவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்ததாக வரலாறு தெரிந்தவர்கள் சொன்னதாக ஞாபகம்.

//படத்தில் கிராபிக்ஸ் செய்தால் அது கிராபிக்ஸ் என்று தெரியாத வண்ணம் செய்தால் நன்றாக இருக்கும். ஆனால், சமீப கால படங்களில் அது கிராபிக்ஸ் என்றூ தெரியும் வண்ணமே, அதன் தரம் இருக்கின்றது. உதாரணம். தில்லை சிதம்பரம் கோவிலை, கானொளிக்கருவி கிழிருந்து மேல் போய், பின் மேலிருந்து கீழ் போகின்றது. கற்கோபுரம் கிராபிக்ஸ் என்று சிறுப்பிள்ளைக் கூட சொல்லும் வண்ணம் இருக்கின்றது. நெப்போலியன்,சோழன் பாத்திரத்தில் நிறைவாக செய்திருக்கிறார்.//

உலக திரைப்படம்ன்னு சொல்லுவதெல்லாம் சுத்த டுபாக்கூர். கிராபிக்ஸ் பல்லிளித்துவிட்டது. நெப்போலியன் தமிழ் கொடுமையா இருக்குது புதசெவி. என்ன மனநிலையில் ரசித்தீரோ தெரியவில்லை. அந்த வள்ளலாருக்கே வெளிச்சம்!

//கமலுக்கு இந்த ஐயங்கார் கதாப்பாத்திரங்களை செய்வதில் அலாதி ஆசை போல் இருக்கின்றது. மைக்கேல் மதனக்காமராஜன், மீண்டும் கோகிலா, ஹே ராம்...என்று பட்டியல் தொடரும். கமல் விரும்பி செய்கின்றாரா என்ற குழப்பம் எனக்கு இருக்கின்றது. எல்லாரையும் அரவனைக்க வேண்டும் என்று சொல்லும் கமல் ஒரு சாதி வட்டத்துக்குள்ளே சிக்கி சீரழிவது எனக்கு வருத்தமே.//

150 படத்துல 5 படம். இதெல்லாம் வாதமே இல்லை. பாலா விளிம்பு நிலை மனிதர்களையே படம் எடுத்து கொல்கிறார் என எதாவது பிளாகர் பதிவு போடுவது உறுதி (நான் கடவுள் படம் ரிலீஸாகும் அன்று).

//அசினுக்குப் பதிலாகவும் கமலே கதாநாயகி வேடமேற்றுயிருக்கலாம். //

இது டாப். மல்லிகாவை விட்டுட்டீங்களே? நியாயமா?

//திருநெல்வேலி வட்டார மொழி பேசியபடி, தில்லை/புதுவைக்கருகே ஒரு போராளியா.//

நாகர்கோவில் மொழி நடை அது. திருமாவை விட்டுடீங்களே?

//இப்படி அடுக்கடுக்காக நடக்கின்ற நிகழ்வுகளில், இந்த 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கதை மட்டும், ஒட்டாமல், தள்ளி நிற்கின்றது. அதைப் பிய்த்துப் போட்டால், படத்தின் ஓட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.//

கேயாஸ் தியரியே இங்குதான் ஆரம்பிக்கிறது. கதையே அதுதான் என நான் சொல்லும் முப்பதாவது ஆள் நீங்க :-)

//ஆக மொத்தம், தசாவதாரம் சுவாரசியமான படம்..ஆனால், உலகத்தரமல்ல.//

100% உண்மை, உண்மையத் தவிர வேறெதுவும் இல்லை.

ரொம்ப நாளா இந்த தசாவதாரம் விமர்சனம் எல்லாம் பார்த்து பொறுத்தது போதும்ன்னு உங்க பிளாக்ல பொங்கிட்டேன்
:-) நீங்களும் நல்லாத்தான் "பொங்கி" இருக்கீங்க :-)

TBCD said...

அப்படின்ன, மற்ற இரண்டு மொழிப்படத்தில் மட்டும் ஏன் தமிழில் பாட வேண்டும்...

படத்தின் களம் தமிழ்நாடு என்று இருக்கும் போது, இந்தியில் படம் எடுத்தாலும், தமிழில் காட்டினால் பொருத்தமாகவே தான் இருந்திருக்கும்..

ஆனால், இந்த "ஓம் நமோ நாராயணாய" என்பதே வடமொழி தான்.. :P

///
கோவி.கண்ணன் said...
//ஹிந்தியில் மட்டும் "தேவ மொழி" ஒலிப்பது ஏனோ. கமலுக்கே வெளிச்சம்//

இப்படி ஒண்ணு வேற இருக்கா ? சிதம்பரத்தில் அம்பி தேவ மொழியில் தான் பாடினாரோ என்னவோ
///

TBCD said...

ஜெகதீசன்,

ஒரு விசயத்தைக் கவனிக்கவும்...

பெரியார் சீர்திருத்தத்தின் போதே, சாதிப் பெயரை அடையாளப்படுத்துவதை நிறுத்தும் வழக்கம் ஆரம்பம் ஆகிவிட்டது. கிராமப்புறங்களில் இன்னும் பெயர் பதிவுகளில் சாதி இல்லாமலே இருக்கும் என்று நினைக்கிறேன்...(அறிந்தவர்கள் சொல்லவும்,..)

ஆனால், வயசான கிழடு கட்டைகள் இன்னும் சாதிப் பெயரை சேர்த்துச் சொல்லுவது வழக்கம் தான்.

ஆனால், படத்தில் பெரிய விஞ்ஞானியாக வரும் கதாப்பாத்திரம் சாதியுடன் சொல்லுவது முரண்படவில்லையா...

அது முழுக்க முழுக்க பெரியார் பெயரை வைத்து நகைச்சுவை செய்யவே செய்யப்பட்டது...

///
ஜெகதீசன் said...
//
அந்த தலைமுறையில் சாதிப் பெயருடன் பெயர் சொல்லுவதை நிறுத்தியாயிற்று.
//
அப்படியா?
எனக்குத் தெரிந்து எங்க ஊரில் ரெம்பப் பேரின் அப்பாக்கள் சாதிப் பெயருடன் அறியப் படுகிறார்கள் இன்னும்...

ஆனால் இங்கு பெரியாரை வசை பாடுவதற்காக இப்படி எடுத்திருப்பது கண்டனத்திற்குறியதே.... :(

////

TBCD said...

நான் திரையரங்கில் தான் பார்த்தேன்...

தரவிறக்கம் குறித்து தகவல்கள் ஏதும் இல்லை....நன்றி தியாகு..

///
salem thiagu said...
படம் பாத்து முடிச்ச கைய்யோட கருத்து சொல்லிட்டீங்க.....

எனக்கு இன்னும் வலயதள இணைப்பு இன்னும் கிடைக்கல.........(தேடிட்டே இருக்கேன்)

எதாச்சும் இணைப்பு இருந்தா அனுப்பிவைங்க.........(முறைப்படி தான் பாக்கணும்..

என்ன செய்ய.. இங்க வேற வழி இல்ல.)

///

TBCD said...

உதய்,

ஓரளவிற்கு நீங்க சொன்னதில் உடன்படுறேன்..ஆனா, படகு தள்ளுபவனும், காவலர்களும் கூட அணிந்திருப்பது...காட்சிப்பிழை தான்...

///
Udhayakumar said...
புதசெவி, அதுதான் உண்மையும் கூட. குடியானவர்கள் அரசனுடன் அனுதினமும் கூடிக் குலவியது கிடையாது. சைவ, வைணவச் சண்டை முழுக்க முழுக்க முப்புரி நூல்காரகள் செய்ததுதான். குடியானவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்ததாக வரலாறு தெரிந்தவர்கள் சொன்னதாக ஞாபகம்.
///
நெப்போலியன் கொடுத்த கதாப்பாத்திரத்தை சரியாக செய்திருப்பதாகவே இப்போதும் சொல்லுகிறேன்..கம்பீரம், அதிகாரம்..

தமிழை அவர் எப்போதும்மே அப்படித் தானே பேசுவார்... :P

///நெப்போலியன் தமிழ் கொடுமையா இருக்குது புதசெவி. என்ன மனநிலையில் ரசித்தீரோ தெரியவில்லை. அந்த வள்ளலாருக்கே வெளிச்சம்!
///

பொறுங்க ஐயா, மொத்த பட்டியல் எடுத்து அதில் பட்டியல் போட்டு எடுத்துச் சொல்லுவோம்...

///
150 படத்துல 5 படம். இதெல்லாம் வாதமே இல்லை. ///

நாஞ்சில் நாடு, நெல்லையயையும் உள்ளடக்கியது தானே... :P..

இதில் திருமா எங்கே வந்தார்..

///
நாகர்கோவில் மொழி நடை அது. திருமாவை விட்டுடீங்களே?
///

கேயாஸ் தியரி எல்லாம்..சரி..

கடலில் எறிந்த ரங்கராஜர் மூலவர். இவர்கள் தூக்கித் திரிவது உற்சவர். அந்த மூலவர் கடலில் விழுந்ததால், ஏதாவது நிகழ்வுகள் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக, கமல் ஆராய்ச்சியில் முடிந்திருந்தால்...அது ஒத்துக்கொள்ளலாம்..

ஆனால், சும்மா, ரங்கராஜரின் பின்னனி என்றூ சம்பந்தமில்லாமல் ஒருவர் இப்படி அதகளம் செய்தான் என்றுச் சொல்லுவது ஏனோ...புதசெவி...உதய்,.சிரமம் பார்க்காமல்...

///
கேயாஸ் தியரியே இங்குதான் ஆரம்பிக்கிறது. கதையே அதுதான் என நான் சொல்லும் முப்பதாவது ஆள் நீங்க :-)
///

VIKNESHWARAN said...

பிரமாண்டத்தையும்.. மேலோட்ட கதையையும் வைத்து மட்டும் விமர்சிக்க முடியாது அல்லவா... இந்த பெயர் விவகாரம் அன்பே சிவம் படத்தில் பார்த்தது தான்.

மாதவன் பெயர் அன்பு என ஆரம்பிக்கும் (ஞாபகம் இல்லை) கமலில் பெயர் சிவம்.

Udhayakumar said...

//ஓரளவிற்கு நீங்க சொன்னதில் உடன்படுறேன்..ஆனா, படகு தள்ளுபவனும், காவலர்களும் கூட அணிந்திருப்பது...காட்சிப்பிழை தான்...
//

உங்களுக்கு தெரியாதது அல்ல. தேவாங்கர், ஆசாரி மற்றும் இன்ன பிற சமூகத்தினர் சிலர் இன்னமும் பூணூல் அணிகிறார்கள். அதே ஆவணி அவிட்டத்தன்று பூணூலும் மாற்றுகின்றனர். நான் படகு தள்ளியவர்கள் என்ன சாதி என ஆராய்ச்சி பண்ணி டாக்டர் பட்டம் வாங்க விருப்பமில்லாததால் இத்துடன் ...

//தமிழை அவர் எப்போதும்மே அப்படித் தானே பேசுவார்... :P//

என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே அய்யா :-( பி.எஸ். வீரப்பா, மனோகர் அளவுக்கு இல்லாவிட்டாலும், கொஞ்சமாவது, அட, கொஞ்சமாவது...

//பொறுங்க ஐயா, மொத்த பட்டியல் எடுத்து அதில் பட்டியல் போட்டு எடுத்துச் சொல்லுவோம்...//

தாரளமாக பொறுக்கிப் போடுங்கள். குப்பையில் போடும் அளவுக்குக்கூட தேராது. சிவாஜி, கமல் இருவரும் போடாத வேடங்கள் ரொம்பக் குறைவு. யாராவது அறியத் தந்தால் மிக அற்புதமாக இருக்கும்.

//நாஞ்சில் நாடு, நெல்லையயையும் உள்ளடக்கியது தானே... :P..

இதில் திருமா எங்கே வந்தார்..//

நெல்லை வழக்கு மொழி வேறு, திருநெல்வேலி வழக்கு மொழி வேறு. நாஞ்சில் நாட்டில் ஒரு வழக்கு மொழிக்கு மேல் இருந்தாலும் நீங்கள் சொன்னது என்னவோ திருநெல்வேலி வட்டார மொழிதான். அது வேறு இது வேறு. நீங்கள் சொல்லியபடி பார்த்தால் தமிழக (திருநெல்வேலி தமிழகத்தில்தானே இருக்கு) வட்டார மொழி என பொதுமைப்படுத்தவும் வாய்ப்புகள் ஏராளம்.

திருமாவை நினைவுபடுத்தும் விதமாகத்தான் அந்த போராளி எனக்குத் தெரிந்தார்.

//கடலில் எறிந்த ரங்கராஜர் மூலவர். இவர்கள் தூக்கித் திரிவது உற்சவர். அந்த மூலவர் கடலில் விழுந்ததால், ஏதாவது நிகழ்வுகள் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக, கமல் ஆராய்ச்சியில் முடிந்திருந்தால்...அது ஒத்துக்கொள்ளலாம்..

ஆனால், சும்மா, ரங்கராஜரின் பின்னனி என்றூ சம்பந்தமில்லாமல் ஒருவர் இப்படி அதகளம் செய்தான் என்றுச் சொல்லுவது ஏனோ...புதசெவி...உதய்,.சிரமம் பார்க்காமல்...//

அதே மூலவர் மேல் சாய்ந்து கொண்டு கமலும் அசினும் பேசிக் கொள்வதாகத்தான் காட்சி முடிகிறது (என்னுடன் படம் பார்த்த நிறைய பேர் இதை கவனிக்கவில்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்). கமலும் சொல்லாமல் நம் கற்பனைக்கே விட்டதால் தான் இதை நான் கேயாஸ் தியரி என ஆரம்ப 12 ஆம் நூற்றாண்டு காட்சிக்கும் சுனாமிக்கும் முடிச்சுப் போட முடிந்தது. உற்சவரை தூக்கிக் கொண்டு ஓடுவது அதிலிருக்கும் வயாலுக்காகத்தான்.

ஜோ / Joe said...

//நாஞ்சில் நாடு, நெல்லையயையும் உள்ளடக்கியது தானே... :P..
//

இல்லை .நாஞ்சில் நாடு குமரி மாவட்டத்தின் உள்ளே மட்டும் தான் இருக்கிறது.

அப்புறம் ,நாஞ்சில் நாட்டு காரருக்கு சிதம்பரத்தில் என்ன வேலை என்ற அபத்தமான கேள்வி வேறு?

நாஞ்சில் நாட்டு ஜீவா சிவகங்கையில் ஆசிரமம் அமைக்கவில்லையா ?

நெல்லை சீமை பாரதி புதுவையில் முகாமமைக்கவில்லையா ?

மதுரைக்கார திருமாவளவன் வடமாவட்டத்தை மையமாக வைத்து அரசியல் பண்ணவில்லையா?

TBCD said...

உதய்,

யார் யார் எல்லாம் பூனூல் மாற்றுகிறார்கள் என்று முழுவதுமாக அறியேன்..சைவ மதத்தை முன்னிறுத்தி வளர்த்ததில், சைவ வெள்ளாளர்கள் முன்னனியில் இருந்ததாக படித்துள்ளேன்..அவர்களும் அணிகிறார்களா தெரியவில்லை..


///
Udhayakumar said...

உங்களுக்கு தெரியாதது அல்ல. தேவாங்கர், ஆசாரி மற்றும் இன்ன பிற சமூகத்தினர் சிலர் இன்னமும் பூணூல் அணிகிறார்கள். அதே ஆவணி அவிட்டத்தன்று பூணூலும் மாற்றுகின்றனர்.
///

அட, ஆசைப்படுவதற்கும் ஒரு அளவு இல்லையா..

///

என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே அய்யா :-( பி.எஸ். வீரப்பா, மனோகர் அளவுக்கு இல்லாவிட்டாலும், கொஞ்சமாவது, அட, கொஞ்சமாவது...

///

திருமா...அந்தப் போராளியா..பொருந்தவில்லை..தலித் போராளிகளின் எண்ணிக்கை குறைவு இந்த முடிவுக்கு காரணமாக இருக்கும்... :P

அதாவது அந்த மூலவர் மேல் சாய்ந்ததால் தான் காதல் வந்ததா..இல்லையே..அட மூலவர் கடலில் விழுந்ததால் தான் சுனாமி வந்ததா..அதுவும் இல்லை..அப்பறம் என்னங்க தொடர்பு...

முதலில் இருந்தே, முதல் சம்பவத்திற்கும் படத்திற்கும் என்ன தொடர்பு என்று எண்ணிக்கொண்டே தான் பார்த்தேன்,.சிலை..மற்றும் எலும்புக்கூடு..சங்கிலி வரை கவணித்தேன்...இத்தனைக் காலம் சங்கிலி, பூட்டு அப்படியே இருக்கின்றதே என்றும் வியந்தேன்..

படத்தின் ஆரம்பத்தில் ரங்கராஜர் மேடையில் வைத்துக்கொண்டு தான் கமல் பேச ஆரம்பிக்கிறார்..ரங்கராஜரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், 12ஆம் நூற்றாண்டு போகனும் என்றுச் சொல்லி,
முடிவில் கிருமிக் கண்ட சோழன் என்றுச் சொல்லி, விஞ்ஞானி கமல் கதை சொல்ல ஆரம்பிக்கிறார்..

இதில், கிருமி மட்டும் ஒற்றூமை தான் தொடர் நிகழ்வு இல்லை..

அந்த பகுதி ஆறாம் விரல்..தான் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை... :)))))))))


///
அதே மூலவர் மேல் சாய்ந்து கொண்டு கமலும் அசினும் பேசிக் கொள்வதாகத்தான் காட்சி முடிகிறது (என்னுடன் படம் பார்த்த நிறைய பேர் இதை கவனிக்கவில்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்). கமலும் சொல்லாமல் நம் கற்பனைக்கே விட்டதால் தான் இதை நான் கேயாஸ் தியரி என ஆரம்ப 12 ஆம் நூற்றாண்டு காட்சிக்கும் சுனாமிக்கும் முடிச்சுப் போட முடிந்தது. உற்சவரை தூக்கிக் கொண்டு ஓடுவது அதிலிருக்கும் வயாலுக்காகத்தான்.

///

rubhan said...

kathapaatiranggalai onrodu onru inaittu paarkkamudiyavillai.kaatcigal piramaatam kataitaan kulappamaaga ullathu.innorumurai paarkka vendum endru ninaikkiren.

rubhan said...

kamalaippondre avarinpadamum puriyataputir.

குமார் said...

படிக்க சுவாரசியமா இருக்கு.

//எல்லா அவதாரங்களும் உயிருடன் மிஞ்ச, ஒரு தலித் அவதாரம் தான் சாகடிக்கப்பட வேண்டுமா என்றக் கேள்வி எழும்புகிறது.//

முதல்ல வர அம்பி கூட கொல்லப்படுகிறாரே! 12ம் நூற்றாண்டுகறதால அது இதில் சேத்தி இல்லையா? அப்படியும் அம்பியைத்தவிர வேறுயாரும் சாகடிக்கப்படவில்லையே?!

சமீபத்தில் குழப்பத்தில் கலந்தவர்கள்